லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் மாதாந்த விலை திருத்தத்தை லிட்ரோ நிறுவனம் இன்று அறிவிக்கவுள்ளது.
எரிவாயு சிலிண்டர்களின் விலைகள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதியன்று மாற்றியமைக்கப்படுகின்றன.
கடந்த இரண்டு மாதங்களில் உலக சந்தையில் எரிவாயுவின் விலைகள் அதிகரித்த போதிலும், லிட்ரோ நிறுவனம் கடந்த மாதம் விலையை மாற்றியமைக்கவில்லை.
எவ்வாறாயினும், சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதால், உள்நாட்டில் இன்று விலை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் கூறியுள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை 103 டொலர்களாக அதிகரித்துள்ளது. அதன்படி இன்று கணிசமான அளவில் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 2,892 ரூபாயாகவும், 5 கிலோ சிலிண்டரின் விலை 1,198 ஆகவும் 2.3 கிலோ சிலிண்டர் 561 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.