தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான – பாதுகாப்பு நிலவர மீளாய்வு 2030- என்ற யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நியதிகளுக்கமைய சவால்களை எதிர்கொள்வதற்கான மாற்று அணுமுறைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக ‘பாதுகாப்பு நிலவர மீளாய்வு – 2030’ அவசியப்படுகிறது.
அதன்படி இந்த மீளாய்வு மாநாட்டில் 2023 வரையான மற்றும் அதன் பின்னரான அணுகுமுறைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.
அதற்கமைய, 2030 ஆம் ஆண்டில் நாட்டின் மூலோபாய அறிவு மற்றும் சவால்கள், நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம், 2030 பாதுகாப்பு கொள்கையின் நோக்கங்கள், மூலோபாய சவாலை எதிர்கொள்ளும் இயலுமை மற்றும் வலு, தற்போதுள்ள நிதி நிலைமைக்கு ஏற்ப அவசர தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க தலைமையிலான, மீளாய்வுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அந்த குழுவில் ரியர் அட்மிரல் ஜே.ஜே.ரணசிக், மேஜர் ஜெனரல் ஜீ.ஆர். வணிகசூரிய, எயார் வைஸ் மார்ஷல் எண்ட்ரூ விஜேசூரிய, சஷிகலா பிரேமவர்தன, டேனியல் அல்போன்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சேவையிலிருக்கும் முப்படை அதிகாரிகள், வெளிநாட்டு சேவை அதிகாரிகள், திறைசேரி அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ள செயலாளர் ஒருவரும் இந்த பணிக்குழுவுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளனர்.