தந்தையின் கவனக்குறைவினால் 10 மாதக் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் போர்த்துக்கலில் இடம்பெற்றுள்ளது.
போர்த்துக்கலின் நோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் அப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்கான காப்பகத்தில் தனது 10 மாதக் குழந்தையை விட்டுவிட்டு பணிக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழக்கம் போல தனது மகளை ஏற்றிக் கொண்டு காரில் பயணித்துள்ள அவர், வழக்கத்திற்கு மாறாக காரிலேயே மகளை மறந்து விட்டுவிட்டுப் பணிக்குச் சென்றுள்ளார்.
கிட்டத்தட்ட 7 மணி நேரத்திற்கு மேலாக வகுப்புகளில் கவனமாக இருந்த அவர், பின்னர் மீண்டும் தனது காருக்கு திரும்பி வந்து பார்த்தபோது அவரது மகள் காருக்குள் சுயநினைவின்றி இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து அவசரகால மருத்துவ சேவை பிரிவினரை அழைத்து தனது குழந்தையின் உயிரைக் காப்பாற்றப் போராடியுள்ளார்.
எனினும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால் குழந்தையின் பெற்றோர் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை அளிக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காருக்குள் நிலவிய உஷ்ணம் காரணமாக குழந்தை உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இதுகுறித்த மேலதிக விபரங்கள் தெரிய வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.