“போர் தொடர்பில் நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன்.போர் என்பது கூட்டு முயற்சியாகும்.. போரை ஜெனரல் ஒருவரால் செய்ய முடியாது. கூட்டு முயற்சியின் அவசியத்தை கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை நான் எனது கட்டுரைகளில் சுட்டிக் காட்டி இருந்தேன். ராணுவத்தால் மட்டும் போர் செய்ய முடியாது. கடற்படை இருக்க வேண்டும். வான்படை இருக்க வேண்டும்.
நமக்கு சிவில் பாதுகாப்பு படை இருந்தது. போலீசாரின் ஒத்துழைப்புக் கிடைத்தது. சிறந்த அரசியல் தலைமைத்துவம் இருக்க வேண்டும். பிக்குகள் எம்மை தைரியப்படுத்தினர். வைத்தியர்கள் தாதிமார் சிகிச்சை அளித்தனர்.
மக்கள் வரி செலுத்தினர். தமது பிள்ளைகளை நாட்டுக்காக வழங்கினர். அமெரிக்கா நமக்கு தொழில் நுட்ப உதவிகளை வழங்கியது. சீனா மற்றும் பாகிஸ்தான் ஆயுதங்களை வழங்கின. இந்தியா புலனாய்வுத் தகவல்கள் உட்பட சிற்றில உதவிகளை வழங்கியது.
அதேபோல இப்போதுள்ள ஜனாதிபதி புலிகள் அமைப்பிலிருந்து கருணாவை பிரித்து எடுத்து அந்த அமைப்பை பலவீனப்படுத்தினார். இதுதான் கூட்டு முயற்சி. ஒசாமா பின் லேடன்கூட உதவினார் என்றே சொல்ல வேண்டும். அவர் அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்தியதால் பயங்கரவாதம் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு மாறியது.
நிதி முடக்கம் உட்பட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. போர் வெற்றி எனப்படுவது தனி நபருக்கு உரியது அல்ல. அது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி”…..
இவ்வாறு தெரிவித்திருப்பவர் இலங்கை ராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா. 2010ல் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக இருந்தவர்.கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்
அண்மையில் சனல் நாலு வெளியிட்ட வீடியோ தொடர்பில் முன்னாள் படை தளபதியும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய சரத் பொன்சேகா தெரிவித்த ஒரு கருத்துக்கு எதிராகவே மேற்படி நேர்காணல் வழங்கப்பட்டிருக்கிறது. ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கும் பொனிபஸ் பெரேராவுக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாக சரத் பொன்சேகா குற்றச்சாட்டியிருக்கிறார். குற்றச்சாட்டை நிராகரித்து பொனிபஸ் பெரேரா மேற்கண்ட நேர்காணலை வழங்கியிருக்கிறார்.
அவர் இலங்கை அரச நோக்கு நிலையில் இருந்து அவ்வாறு கூறுகிறார். ஆனால் அதில் அவர் கூறுவதில் ஓரளவுக்கு உண்மை உண்டு. போர் வெற்றி தொடர்பாகவும் பிராந்திய மற்றும் அனைத்துலக அளவில் தமக்கு கிடைத்த உதவிகள் தொடர்பாகவும் அவர் கூறுவதில் இருந்து தமிழ் மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
முதலாவதாக, அவர் கூறுவது போல, போர் ஒரு கூட்டு முயற்சி. அதில் கிடைக்கும் வெற்றியும் அந்த கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான்.அதில் கிடைக்கும் தோல்வியும் கூட்டு முயற்சி இல்லாததால் கிடைத்த ஒன்றுதான்.
இறுதிக்கட்டப் போரில் வன்னி கிழக்கில், ஒரு சிறிய நிலத் துண்டில் ஆயிரக்கணக்கான மக்கள் சுற்றி வளைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. ஐ.நா கப்பல் அனுப்பும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வணங்கா மண் கப்பலை அனுப்புவார்கள்…. என்றெல்லாம் வதந்திகள் பரவின. ஆனால் வணங்காமண்ணும் வரவில்லை ஐ.நாவும் வரவில்லை. இறுதியாக கைகளை உயரத் தூக்கிபடி சரணடைவதைத் தவிர வேறு தெரிவு சாதாரண ஜனங்களுக்கு இருக்கவில்லை.
தமிழ் மக்களிடம் மிகப் பலமான ஒரு புலம்பெயர்ந்த சமூகம் உண்டு. உலகின் மிக இளைய, ஆனால் மிகக் கவர்ச்சியான, மிகத் தாக்கமான, சக்தி மிக்க, துடிப்பான, நிதிப் பலம் மிக்க ஒரு புலம்பெயர்ந்த சமூகமாக அது பார்க்கப்படுகிறது.
பிராந்தியத்தில் பாக்கு நீரிணைக்கு அப்பால் சுமார் எட்டு கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். ஈழத் தமிழர்களுக்காக அவர்களின் 19 பேர் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள்.
இவ்வாறு நிதிப்பலம் மிக்க ஒரு புலம்பெயர்ந்த சமூகமும் எண்ணிக்கையால் பெரிய தமிழகமும் இருக்கத்தக்கதாக ஈழத் தமிழர்கள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டார்கள்?
அதிலும் குறிப்பாக மேஜை ஜெனரல் பொனிபஸ் பெரேரா கூறுவது போல பிராந்தியத்தில் ஒன்றுக்கொன்று எதிராகக் காணப்படும் சீனா- இந்தியா- அமெரிக்கா- பாகிஸ்தான் ஆகிய வெவ்வேறு நாடுகள் எவ்வாறு இலங்கைக்கு உதவி புரியும் ஒரு நிலைமை தோன்றியது? அல்லது அதனை மறுவளமாகக் கேட்டால், தங்களுக்கிடையே பிராந்தியத்திலும் உலக அளவிலும் முரண்படும் மேற்படி நாடுகள் எப்படி தமிழ் மக்களுக்கு எதிராக ஒரே கோட்டில் வந்து நின்றன?
பிராந்தியத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒத்து வராது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் ஒத்து வராது. உலக அளவில் சீனாவின் எழுச்சியை அமெரிக்கா ரசிக்கவில்லை. இவ்வாறாக பிராந்திய அளவிலும் உலக அளவிலும் ஒன்றுக்கு ஒன்று நட்பாக இல்லாத நாடுகள் அனைத்தையும் தமிழ் மக்களுக்கு எதிராக ஒன்று திரட்ட எப்படி இலங்கை அரசாங்கத்தால் முடிந்தது?
இந்தக் கேள்விகளுக்கு தமிழ் மக்கள் விடை காண வேண்டும்.தமிழ் மக்கள் எங்கே தோற்றார்கள்? எப்படித் தோற்கடிக்கப்பட்டார்கள்?
மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா கூறுவது போல செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின் ஆயுதப் போராட்டங்களுக்கு எதிரான அனைத்து உலகச் சூழல் ஒன்று உருவாகியது என்பது உண்மை. அவ்வாறு மாறிய ஓர் அனைத்து உலகச் சூழலை அரசுடைய தரப்பாகிய சிங்கள மக்கள் கெட்டித்தனமாகக் கையாண்டார்கள். ஆனால் அரசற்ற தரப்பாகிய ஈழத் தமிழர்கள் ஏன் கையாள முடியவில்லை?
இக்கேள்விகள் 2009க்கு பின்னிருந்து தல தடவைகள் கேட்கப்படுகின்றன. ஆனால் இக்கேள்விகளுக்கு உரிய விடைகளைக் கற்றுக் கொள்வதில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் ஆர்வமாக இருக்கிறார்களா?
இக் கேள்விகளை எழுப்பக் காரணமாக உள்ள பொனிபஸ் பெரேராவின் நேர்காணலானது அண்மையில் வெளியிடப்பட்ட சனல் 4 வீடியோவின் விளைவு ஆகும். அந்த வீடியோ மேற்கத்திய நாடுகளின் நலன்களைப் பிரதிபலிப்பது. ராஜபக்சக்களை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கும் உள்நோக்கமுடையது.
அந்த வீடியோவின் விளைவாக இலங்கை அரசுக் கட்டமைப்பைச் சேர்ந்த போரில் சம்பந்தப்பட்ட வெவ்வேறு தரப்புக்களும் நபர்களும் ஒருவர் மற்றவருக்கு எதிராக தெரிவிக்கும் கருத்துக்களை தென்னிலங்கை ஊடகங்களில் காண முடிகிறது.
அவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கு எதிராகவே பொனிபஸ் பெரேரா மேற்கண்ட நேர்காணலை வழங்கியுள்ளார். அவ்வீடியோவானது போரில் வெற்றி பெற்ற தரப்பைத் தங்களுக்கு இடையே மோத விட்டிருக்கிறது. ஆனால் அந்த மோதலின் விளைவாக தமிழ் மக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய சில விடயங்கள் வெளிப்படுகின்றன.
பொனிபஸ் பெரேரா கூறும் கூட்டு முயற்சிக்கும் அவர் கூறாமல் விட்ட சில தரப்புக்களும் உண்டு. ஐநா போன்ற உலகப் பொது நிறுவனங்களுக்கும் இதில் கூட்டுப் பொறுப்பு உண்டு.இறுதிக்கட்டப் போரில் சில நாடுகள் நேரடியாக தலையிட்டன.சில நாடுகள் மறைமுகமாகத் தளியிட்டன.
சில நாடுகள் தலையிடாமல் விட்டு அரசாங்கத்தை வெற்றிபெற வைத்தன.அங்கு தலையிடாமையே ஒரு தலையீடுதான். சில உலகப் பொது நிறுவனங்களும் அவ்வாறு பொருத்தமான நேரத்தில் பொருத்தமான விதங்களில் தலையிடத் தவறின. இதில் ஐநாவுக்கும் பொறுப்பு உண்டு.
இப்பொழுது 54ஆவது ஐநா கூட்டத் தொடர் போய்க்கொண்டிருக்கிறது. இக்கூட்டத்தொடரை முன்னிட்டே சனல் நாலு மேற்கண்ட வீடியோவை வெளியிட்டது. அவ்வீடியோவானது மேற்கத்திய நோக்கு நிலையில் இருந்தே வெளியிடப்பட்டிருக்கிறது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சக்கள் போட்டியிடுவதை தடுப்பது அந்த வீடியோவின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அதே சமயம் அந்த வீடியோ வெளிப்படுத்தும் செய்தி தமிழ் மக்களுக்குச் சாதகமானது. இலங்கைத் தீவின் அரசுக் கட்டமைப்பும் புலனாய்வுக் கட்டமைப்பும் பொறுப்புக்கூறும் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதனை நிரூபிப்பதற்கு உதவும் சான்றுகளில் அந்த வீடியோவும் ஒன்று.
ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம், இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூற வைப்பதற்காக என்று கூறிக்கொண்டு சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் ஒரு பொறிமுறையை உருவாக்கியிருக்கிறது. எனவே பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் மீது தமிழ் நோக்கு நிலையில் இருந்து நிர்ப்பந்தங்களை பிரயோகிப்பதற்கு அந்த வீடியோ உதவும். அதைத் தமிழ் மக்கள் வெற்றிகரமாகக் கையாள வேண்டும்.
பொனிபஸ் பெரேரா கூறுவது போல அது ஒரு கூட்டு முயற்சியாக இருந்தால்தான் வெற்றி கிடைக்கும். போர் மட்டுமல்ல இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூற வைக்கும் நடவடிக்கைகளும், நீதிக்கான போராட்டங்களும் கூட்டு முயற்சிகள்தான். கட்சி முயற்சிகள் அல்ல.