சாய்ந்தமருதில் மீனவர்களும், மீனவ வாடி உரிமையாளர்களும் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலரிப்பினால் தமது மீனவ வாடிகள் முழுமையாக கடலுக்குள் அடித்துச் செல்வதாகவும், மீனவ நடவடிக்கைகளுக்கு இடையூறாக கரையோரம் பேணல் திணைக்களத்தினர் பாறாங்கற்களைக் கொண்டு வீதிகளை மறித்து வைத்திருப்பதனால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும் தெரிவித்தே மீனவர்களால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது கருத்துத் தெரிவித்த மீனவர்கள்”கரையோரம் பேணல் திணைக்களம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கடலரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பாறாங்கற்களை சாய்ந்தமருது கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் தேக்கி வைத்துள்ளனர். இதனால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முடியாமல் உள்ளது.
மேலும், மீன்பிடி வள்ளங்களை கரைக்கு இழுத்து வைக்க முடியதளவில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளமையால் உடனடியாக கடலரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை கரையோரம் பேணல் திணைக்களத்தினர் துரிதப்படுத்த வேண்டும்” இவ்வாறு தெரிவித்தனர்.
இந்நிலையில் களத்திற்கு விஜயம் செய்த சாய்ந்தமருது பொலிஸார் அங்கிருந்த கரையோரம் பேணல் திணைக்கள உத்தியோகத்தர் ஏ.எம். நுஸ்ரத் அலியிடமும், மீனவர்களிடமும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இணக்கமான நிலையை உருவாக்கி நிலமையினை சீர்செய்ததுடன் போக்குவரத்தையும் சீர் செய்தனர்.