அமெரிக்காவில், பொலிஸ் ரோந்து வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட அதிகாரியைப் பணியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தி, 6,700 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
அமெரிக்காவின், வொஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானவி கண்டூலா (வயது 23) என்ற மாணவி முதுநிலை பட்டப்படிப்பினை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அணமையில் சியாட்டில் நகரில் மாணவி ஜானவி சாலையை கடந்தபோது மணிக்கு 120கி.மீ., வேகத்தில் வந்த பொலிஸ் ரோந்து வாகனம் அவர் மீது மோதியது. இதில் 100 மீ., தொலைவுக்கு துாக்கி வீசப்பட்ட மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குறித்த அந்த வாகனத்தை கெவின் டேவ் என்ற பொலிஸ் அதிகாரி செலுத்தியுள்ளதோடு அவருடன் டேனியல் ஆடரெர் என்ற மற்றொரு பொலிஸ் அதிகாரியும் இருந்தார்.
விபத்துக்கு பின் சியாட்டில் பொலிஸ் சங்க தலைவரை தொலைபேசியில் அழைத்த அதிகாரி டேனியல் இது குறித்து அவரிடம் தகவல் தெரிவித்தார். இதன்போது மாணவி குறித்தும் அந்த விபத்து குறித்தும் கேலியாக பேசி அவர் சிரித்துள்ளார்.
இது குறித்த ஓடியோ அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறித்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய வம்சாவளி எம்.பி., க்களும், அமெரிக்க வாழ் இந்தியர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரிகள் சங்கம், விபத்து நடந்த போது பேசிய உரையாடலின் ஒருபகுதி மட்டுமே வெளியாகியுள்ளது. மாணவிக்கு உதவும் வகையில் டேனியல் கூறிய கருத்துகள் எதுவும் அதில் வெளியிடப்படவில்லை எனக் கூறியுள்ளது.
இதேவேளை டேனியலை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் உட்பட 6,700 பேர் கையெழுத்திட்ட மனு சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.