1980 ஆம் ஆண்டின் நடுப்பகுதிகளில் தமிழ் சினிமாவை தனது வசீகரத் தோற்றத்தால் கட்டிப்போட்டவர் சில்க் சிமிதா. அக்காலத்தில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் ‘சில்க்‘ என்கிற பெயரை கேட்காமலோ, சில்க்கின் முகத்தை எந்த வடிவத்திலாவது பார்க்காமலோ வீட்டிற்குத் திரும்புவது அரிதான விடயம்.
அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா வியாபித்திருந்தார். உண்மையில் யார் இந்த சில்க் ஸ்மிதா. அவருக்கு இத்தனை புகழ் வரக் காரணம்தான் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இப்பதிவில் விடை காண முயல்கின்றோம்.
விஜயலட்சுமி என்ற இயற்பெயரைக் கொண்டவர் தான் சில்க் சிமிதா.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் வறுமை காரணமாக பாடசாலை படிப்பை நிறுத்தி விட்டு 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக திரைத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
இந்நிலையில் 1980 ஆம் ஆண்டு தமிழ் நடிகரும் இயக்குனருமான வினுச்சக்ரவர்த்தியின் மூலம் ”வண்டிச்சக்கரம்” என்கிற ஒரு தமிழ் திரைப்படத்தில் ‘சில்க்‘ என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
பின்னர் அப்பாத்திரத்தின் பெயராலேயே சில்க் ஸ்மிதா என அழைக்கப்பட்டார். இப்படத்தைப் பார்த்தபின்னரே பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் தியாகராஜனின் மனைவியாக நடிக்கும் வாய்ப்பு ஸ்மிதாவுக்குக் கிடைத்தது. எனினும் அவருக்கு வலுவான காட்சிகள் அப்படத்தில் அமைக்கப்படாததால் அவர் யாரையும் பெரிதாகக் கவரவில்லை.
எவ்வாறு இருப்பினும் அதன் பின்னர் பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த மூன்றாம் பிறை பலருக்கும் திருப்பு முனையாக அமைந்தது அதில் சில்க் ஸ்மிதாவும் அடங்குவார். பொன்மேனி உருகுதே பாடலில் லைட்டிங்கும், கெமெரா கோணங்களும் சில்க் ஸ்மிதாவை சாதாரணப் பெண் இல்லை,கிளியோபட்ரா மறு ஜென்மம் என்றே தோன்ற வைத்தது.
அதில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு சில்க்கின் ராஜ்யம் தான் தமிழ் சினிமாவைக் கட்டிப்போட்டது. அதே ஆண்டு வெளியான சகல கலா வல்லவனில் கமலுடன் அவர் ஆடிய ”நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுடி யம்மா…” பாடல் தமிழக இளைஞர்களின் தூக்கத்தை தொலைக்க வைத்தது.
இதனையடுத்து கங்கை அமரன் இயக்கிய முதல் படமான ‘கோழி கூவுது…‘ திரைப்படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக வேடம் கிடைத்தது. அந்தப் படத்தில் வரும் ”பூவே இளைய பூவே பாடல்…. ”சில்க்கை ஒரு தேவதையாக்கியது. அந்த மூன்று ஆண்டுகளில் வருடத்துக்கு 20 படங்களுக்கு மேல் நடித்தார் சில்க் ஸ்மிதா. அக்காலத்தில் பிரபலம் வாய்ந்த பத்திரிகைகளில் சில்க் ஸ்மிதாவின் ஒரு படத்தையாவது முழுப்பக்கத்தில் போட்டு விடுவார்கள்.
அவருக்கு அப்போது இருந்த கிரேஸை விவரிக்க தமிழில் மட்டுமல்ல எந்த மொழிகளிலும் வார்த்தை இல்லை. குறிப்பாக சில்க்கிற்காக மற்றவர்களின் திகதிகள் மாற்றம் செய்து கொள்ளப்பட்டன. அவரின் நடனம் இருந்தால் மட்டுமே படத்தை வாங்குவோம் என வினியோகஸ்தர்கள் அடம் பிடித்தார்கள். எனினும் எத்தனை விதமான வேடங்களை அவருக்கு கொடுத்தார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
சில இயக்குநர்கள் நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்களை ஸ்மிதாவுக்குக் கொடுத்தாலும் அவரை ஒரு குத்து நடனம் ஆடும் நடிகையாகவே பெரும்பாலான தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் பார்த்தனர்.
தன்னுடைய கண்ணாலேயே அத்தனை பாவங்களையும் காட்டிவிடக் கூடிய வல்லவர் சில்க் ஸ்மிதா. அவரின் உடல் அமைப்பை விடுங்கள். அவர் கண்ணே யாரையும் புரட்டிப் போட்டு விடும் வல்லமை கொண்டது. அதை ஒரு படத்தில் கூட சரியாக உபயோகப் படுத்தவில்லை தமிழ் சினிமா.
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம்,தெலுங்கு,கன்னடம், இந்தி என எல்லா மொழிப் படங்களிலும் சில்க் நடித்த போதிலும் அவரை பெரும்பாலான திரைத்துறையினர் ஒரு கவர்ச்சி பண்டமாகவே பார்த்து அந்த ரீதியிலேயே வேடங்களைக் கொடுத்தார்கள்.
சில்க் கதாநாயகியாய் நடித்து ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இயக்கிய அன்று பெய்த மழையில் என்னும் படத்திலும், தம்பிக்கு ஒரு பாட்டு என்னும் படத்திலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
எவ்வாறு இருப்பினும் சில்க்கிற்கு குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக அமையவில்லை. அவரது குடும்ப வாழ்க்கை ஏமாற்றங்களும், வலிகளும் நிறைந்த ஒன்றாகவே இருந்தது. ஏறத்தாழ 400 படங்களுக்கு மேல் எல்லா மொழியிலும் நடித்திருந்தாலும் தன் முப்பத்தைந்து வயதில் கடந்த 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்று அவிழ்க்க முடியாத மர்மமாகவே உள்ளது. அவருக்கு சரியான ஒரு வழிகாட்டி இருந்து அவரை சரியாக தனது படங்களைத் தெரிவு செய்ய உதவியிருந்தால் ஸ்மிதா எங்கேயோ போயிருப்பார் என்ற வருத்தம் அவரது ரசிகர்கள் மத்தியில் இன்றுவரை இருந்து வருகின்றது என்பது பொய்யில்லை.