பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி பத்தாவது நாளாகவும் சுழற்சி முறையிலான கவனயீர்ப்பு பேராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் விடு;த்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த 15 ஆம் திகதி முதல் போராட்டத்தில் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாவலி என்னும் போர்வையில் எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே, மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய குடியிருப்புகளை உடனடியாக நிறுத்து, மாதவனையை மேய்ச்சல்தரையாக பிரகடனப்படுத்து போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பியவாறு இன்றும் போராட்டத்ததை முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றிய உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.