பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு உலக நாடுகள் பலவற்றிடம் இருந்து இலங்கைக்கு ஆதரவு கிடைத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட 101 கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2048 – பசுமைப் பொருளாதாரத் திட்டத்திற்குத் தேவையான நிதி திரட்டிக்கொள்வதற்கான ஒப்பந்தங்களை இலங்கை ஏற்கனவே செய்துகொண்டு வருகின்றது.
சர்வதேச மாநாடுகள் மற்றும் அரச தலைவர்களின் சந்திப்புகளில் ஜனாதிபதி விடுத்த கோரிக்கைகளின் பலனாக குறுகிய காலத்தில் இந்த ஒப்பந்தங்களை செய்துக்கொள்ள உலக நாடுகள் இணங்கியுள்ளன.
குறிப்பாக ஜனாதிபதியின் காபன் கிரெடிட் திட்டம் உள்ளிட்ட சர்வதேச முயற்சிகளின் பலனாக, சிங்கப்பூருடனும் இலங்கை ஒப்பந்தத்தில் கைசாத்திட முடிந்துள்ளது.
காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைக்க சர்வதேச சமூகத்தின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் ஊடாக விவசாயிகள் உட்பட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தணிக்க தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய பிராந்திய நாடுகளுடன் ஒத்துழைத்துச் செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.