தனது மகளுக்குத் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு ஆறுமாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் தென்கொரியாவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முதல் தனது மகளுக்குத் தொடர்ச்சியாகக் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இதுவரை 306 குறுஞ்செய்திகளை அவர் அனுப்பி வந்துள்ளார் எனவும், 111 தொலைபேசி அழைப்பினை அவர் ஏற்படுத்தி வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் அவர் அனுப்பியுள்ள குறுஞ்செய்திகள் எல்லாம் சாதாரணமாகவே இருந்துள்ளன எனவும், நாட்கள் செல்லச் செல்ல அவரது மகள் எந்த செய்திக்கும் ஒழுங்காக பதிலளிக்காததால், பிற்பட்ட நாட்களில் அவர் அனுப்பும் குறுஞ்செய்திகளில் தவறான வார்த்தைப் பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் சொந்த மகளின் பாலியல் நடத்தையைக் கூட இழிவாக பேசும் நிலைக்கு அவர் சென்றுள்ளார் எனவும், தனது மகளை அவருக்குத் தெரியாமலே பின் தொடர்ந்து சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இப்பிரச்சனை பெரிதான பிறகு மகளின் வீட்டிற்கு செல்வதை அவர் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார் எனவும் யாரும் இல்லாத நேரத்தில் அவரது வீட்டை எட்டிப்பார்க்கும் செயல்களிலும் ஈடுபட்டுவந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ”சொந்த மகளாகவே இருந்தாலும் அவர் செய்த அனைத்துமே குற்றமாகும் எனத் தெரிவித்துள்ளதோடு அவருக்கு ஆறு மாத கால சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.