மீண்டும் இஸ்ரேல் – பலஸ்தீனிய மோதல்கள் வெடித்துள்ளன. காது பிளக்கும் குண்டுகளின் முழக்கம் அப்பிரதேசமெங்கும் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
திடீரென இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட அந்நாட்டின் பல முக்கிய நகரங்களின் மீது வெறும் இருபதே நிமிடங்களில் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்கட்டுக்களை ஏவித் தாக்குதலை நடத்தியது ஹமாஸ் அமைப்பு.
உலகின் தலை சிறந்த உளவு அமைப்பாகப் பார்க்கப்படும் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் மீது தற்போது அனைவரது கவனமும் திரும்பியிருக்கின்றது.
மொசாட்டினது ஒட்டுமொத்த அவதானங்களையும் தவிடுபொடியாக்கி தனது தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றதா ஹமாஸ் அமைப்பு என்ற கோணத்தில் சர்வதேச விமர்சனங்கள் வெகுவாகக் கிளம்பியிருக்கின்றன.
ஹமாஸ் குழுவினருடன், சில ஆயுதக் குழுவினரும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். பலர் பணயக் கைதிகளாகவும் பிடிக்கப்பட்டுள்ளனர். இது ஹமாஸ் உள்ளிட்ட குழுவினரின் பேரம் பேசும் தந்திரமாக இருக்கலாம்.
ஆனால் அமெரிக்காவினது பரிபூரண ஆதரவுடன் தனது அதிநவீன ராணுவத்தை கட்டமைத்துள்ள இஸ்ரேலை நிலைகுலையச் செய்யும் அளவிற்கு ஹமாஸ் அமைப்பின் தாக்குதல்கள் தற்போது மூர்க்கத்தனமாகக் கிளம்பியிருக்கின்றன.
எனினும் கடந்த காலங்களில் இஸ்ரேலினது உளவு அமைப்பான மொசாட், பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்கு உள்ளேயும் லெபனான், சிரியா மற்றும் ஏனைய பல பிராந்தியங்களிலும் தனது உளவுக் கட்டமைப்பை பலமானதாகக் கொண்டுள்ளது.
மேலும் குறித்த பகுதிகளில் தகவல்களை சேகரித்துக் கொள்ளக்கூடிய வகையில் பல உளவாளிகளையும் கட்டமைத்து வைத்திருக்கின்றது.
அதற்கு உதாரணமாக தனக்கு எதிராக ஆயுதமேந்தியுள்ள பல குழுக்களின் தலைவர்களின் அனைத்து செயல்பாட்டுகளையும் முழுமையாக அதானித்து அவர்களைக் குறித்த நேரத்தில் படுகொலை செய்தது இஸ்ரேலின் மொசாட் அமைப்பு.
மேலும் கடந்த காலங்களில், இஸ்ரேல் உளவு அமைப்பின் உதவியுடன் அந்நாட்டின் இராணுவம் வெடித்துச் சிதறும் கையடக்கத் தொலைபேசிகளைக்கூடப் பயன்படுத்தித் தனது திட்டங்களை நிறைவேற்றியிருந்தது.
அதுமட்டுமல்லாது காசாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள பதற்றமான தரைப்பகுதிகளின் எல்லையில் விசேட கமராக்கள், தரை அவதானிப்பு சென்சார்கள் கொண்ட கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளது இஸ்ரேல்.
அத்துடன் வழமையான இராணுவ ரோந்து அவதானிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இத்தனை பாதுகாப்பு வலையமைப்புக்களையும் மீறி இஸ்ரேலினது கண்ணில் மண்ணைத் தூவியிருக்கின்றது ஹமாஸ் அமைப்பு.
அத்துடன் அதி நவீன தொழிநுட்பங்களினைக் கொண்டு பல சந்தர்ப்பங்களில் ஜி.பி.எஸ் தொழிநுட்பத்தின் மூலம் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் தனது திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கின்றது மொசாட்.
ஆனால் இத்தனை வலையமைப்புக்களைக் கொண்டுள்ள மொசாட் தற்போது ஹமாஸின் இந்த திடீர் தாக்குதலை அறிந்திருக்கவில்லை என்பதை சர்வதேச சமூகம் வியப்புடன் பார்ப்பதை அவதானிக்க முடிகின்றது.
இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் ஹமாஸின் ஆயுதம் தாங்கிய குழுவினர் எல்லைப்பகுதியில் சாதாரணமாக புல்டோசர் மூலமும், பாதுகாப்புக் கம்பிகளை வெட்டியும் தரை வழியாகவே நுழைந்துள்ளனர்.
சிலர் கடல் வழியாகவும், பாராகிளைடர் மூலம் வான் வழியிலும் இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.
மொசாட்டினது பாதுகாப்பு வரம்புகளையும் மீறி ஹமாஸின் இந்த அதிரடி நடவடிக்கைகளின் பின்னணி குறித்து தற்போதுதான் இஸ்ரேலினது நெருங்கிய நண்பனான அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் உறக்கம் திடீரெனக் கலைக்கப்பட்டுள்ளதாகவே கருத முடிகின்றது.
இந்த நிலையில்தான் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்கள் தொடர்பாக அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட நாடுகள் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் புனித பாப்பரசர் பிரான்சிஸ் ஆகியோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் அவசரமாகக் கூடிய ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஒருமித்த கருத்து எதுவும் எட்டப்படவில்லை எனவும், ஹமாஸை கடுமையாகக் கண்டிக்குமாறு சபையின் 15 உறுப்பினர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்த போதும் உறுப்பினர்கள் அதற்கு ஆதரவை வழங்கவில்லை.
சுமார் 90 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த கூட்டத்தின் போது ஐ.நா.வின் மத்திய கிழக்கு அமைதித் தூதுவர் டோர் வென்னஸ்லாந்திடம் விளக்க அறிக்கையும் கோரப்பட்டு இருக்கின்றது.
ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுவினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலும் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளதால், 2021-ம் ஆண்டுக்குப் பின்னர் அந்தப் பிரதேசத்தில் மீண்டும் பரியளவில் போர் மேகம் கருக்கொண்டிருக்கின்றது.
இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல்..
முதலாம் உலகப் போர் காலப்பகுதியில், மத்திய கிழக்கு ஆசியாவில் பாலத்தீனம் என்று அறியப்பட்ட பகுதியில் ஆட்சிபுரிந்த ஒட்டோமான் பேரரசை பிரிட்டன் வென்றதையடுத்து பாலஸ்த்தீனம் பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பாலஸ்த்தீன பகுதியில் யூதர்களுக்கான தாய் நாட்டை உருவாக்கும் பொறுப்பை சர்வதேசம் பிரிட்டனுக்கு வழங்கியது.
இதனையடுத்தே பாலஸ்த்தீனத்தில் சிறுபான்மையினராக வசித்து வந்த யூதர்களுக்கும், பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்த அரேபியர்களுக்கும் இடையே மோதல் நிலைமைகள் ஆரம்பித்தன.
யூதர்களின் மூதாதையர்களுக்கு சொந்தமானதாக கருதப்பட்ட நிலத்திற்கு பாலத்தீன அரேபியர்கள் உரிமை கொண்டாடியதுடன் அங்கு யூதர்களுக்கு தனிநாடு உருவாக்கும் பிரிட்டனின் நடவடிக்கையையும் அவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர்.
பாலஸ்த்தீனப் பிரதேசங்களில் இயங்கி வரும் பல்வேறு ஆயுதக் குழுக்களில் மிகப் பெரிய அமைப்பு ஹமாஸ் ஆகும்.
மேற்குக் கரையையும் காசா நிலப் பகுதியையும் ஆக்கிரமிக்கும் இஸ்ரேலை அழிப்பதே தங்களது நோக்கம் என இஸ்ரேலிற்கு எதிரான முதல் பாலஸ்த்தீன எழுச்சி தொடங்கிய பின்னர் 1987-ஆம் ஆண்டில் ஹமாஸ் தோற்றம் பெற்றது.
இந்தத் தொடக்கப்புள்ளியே இன்றுவரை வேர் விட்டு வியாபித்திருக்கின்றது.
பல ஆண்டுகளாகத் தொடரும் இஸ்ரேல் – பாலத்தீன மோதல்களால் இருதரப்பிலும் உயிரிழப்புக்கள் நிகழ்வதும், அப்பாவி மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்துவரும் நிலையே காணப்படுகின்றது.
இஸ்ரேலின் எல்லைப் பிரதேசங்களில் பல சமூகங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதமேந்திய குழுக்களை ஒழித்து அதன் தெற்கு எல்லைகளின் ஊடுருவல்களைக் கட்டுப்படுத்துவதே இஸ்ரேலுக்கு தற்போது மிக மிக முக்கியமான சவாலாக இருக்கும்.
இதனிடையே லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் ஹமாஸ் அமைப்பினது தாக்குதலுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பின் ஆதரவாளர்கள் பேரணி ஒன்றினை நடத்தியுள்ளனர்.
எனினும் ஹமாஸ் குழுவினருடனான மோதல் நடவடிக்கைகளில், ஹிஸ்புல்லா அமைப்பானது தலையிடக் கூடாது என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
ஹிஸ்புல்லா ஈரானின் முழுமையான ஆதரவைப் பெற்றுள்ள லெபனானில் அதிக செல்வாக்கைக் கொண்டுள்ள அமைப்பாகும்.
லெபனானில் இருந்து செயற்பட்டு வரும் சக்திவாய்ந்த ஹிஸ்புல்லா அமைப்பானது இஸ்ரேல் – பாலஸ்தீன் மோதல்களுக்குள் நுழைவதற்கான சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. எனினும் அவ்வாறான நிலைமை ஏற்படுமானால் தற்போதைய தாக்குதல் நிலைமைகள் கட்டுப்பாட்டை மீறும் என்பதே வெளிப்படை.
இந்நிலையில், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் இஸ்ரேல் – பாலஸ்தின மோதல்கள் எவ்வாறு ஆரம்பித்தன, மேற்குக் கரைப் பிராந்தியங்கள் மற்றும் காசா எல்லைப் பகுதிகளில் தொடரும் குழப்பநிலைகள், புனித ஜெருசலேம் நகரத்தினது உரிமை குறித்த விடயங்கள் தொடர்கதைகளாக இருக்கும் பட்சத்தில் குறித்த மோதல் நிலைமைகள் அதிகரித்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை…
உறுதியற்ற அரசியல் இருப்புக்களும் சிறுபான்மையினத்தின் மீதான அடக்குமுறைகளும் ஒரு இனத்தினது இருப்பின் தொடர்ச்சியைக் கேள்விக்குறியாக்கும் என்பதை இஸ்ரேல் – பாலஸ்தின மோதல்கள் இலங்கையின் அரசியல் குழப்பங்களுடன் மெதுவாக நினைவுபடுத்திச் செல்கின்றன.
– மித்திரன்