பிரித்தானியாவில் ஆப்கானிஸ்தானின் தூதரக செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தூதரக அதிகாரிகள் போதிய அளவு ஒத்துழைப்பு வழங்காமை காரணமாகவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய போதும் பெரும்பாலான உலக நாடுகள் தலிபான்களை ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளா்களாக அங்கீகரிக்கவில்லை.
இதன்காரணமாக பெரும்பாலான நாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள், முன்னாள் ஆப்கானிஸ்தான் அரசின் பணியாளா்களால் செயற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் லண்டன், வியன்னாவில் உள்ள இரு ஆப்கானிஸ்தான் தூதரங்களின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அப்துல் காஹா் பால்கி கூறுகையில், ‘இரு தூதரங்களின் செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இந்த நிலை தொடரும்’ என்றாா்.
தலிபானின் இந்த முடிவால், கடவுச்சீட்டு , நுழைவு இசைவு (விசா) வழங்குதல் மற்றும் புதுப்பிப்பு பணிகள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.