மீட்டியாகொட பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 42 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதாள உலகக்கும்பலின் உறுப்பினர் ஒருவர் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று அந்த இடத்திற்கு சென்றுள்ளது.
இதன்போது குறித்த சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் இதனை அடுத்து பதிலுக்கு அதிரடிப்படையினரும் துப்பாக்கி சூட்டை நடத்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டின் போது காயமடைந்த சந்தேக நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர், அண்மையில் காலி கரகொட பிரதேசத்தில் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடைய இருவரில் ஒரு சந்தேகநபர் என பொலிஸார் தெரிவித்தனர்.