பெரும்போக பயிர்செய்கையை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே விவசாயிகளுக்கு தேவைiயான உரங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெரும்போகத்திற்கான வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
விவசாய அமைப்புகள் அனைத்தையும் சந்தித்து நான் கலந்துரையாடியுள்ளேன்.
உரங்கள் மற்றும் எரிபொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெறுமா என்பது விவசாயிகளுக்கு இருக்கும் பிரதான பிரச்சினைகளாக காணப்படுகின்றது.
கடந்த போகத்திலும் அவர்கள் வைத்த நம்பிக்கையை நாங்கள் உறுதிப்படுத்தினோம்.
மூன்று வகையான உரங்களையும் விவசாயிகளுக்கு வழங்கியதன் ஊடாக வெற்றிகரமான அறுவடையை பெற முடிந்தது.
இம்முறையும் பயிர்செய்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அதற்கு தேவையான உரங்களை அனுப்பி விவசாயிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி இந்த போகத்தையும் வெற்றியுடன் முன்னெடுக்கவே எதிர்பார்க்கின்றோம்.
சென்றமுறை 800 மெற்றிக் தொன் அரிசி நாட்டுக்கு கொண்டு வர நேர்ந்தது.
என்றாலும் கடந்த பெரும்போக மற்றும் சிறுபோக பயிர்செய்கையை வெற்றிகரமாக முன்னெடுத்ததன் காரணமாக வெள்ளத்தினால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் நாட்டு மக்களுக்கு தேவையான போதியளவு அரிசி காணப்படுகின்றது.
அரிசி இறக்குமதி செய்யுமாறு பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனாலும் அவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
மக்களின் நுகர்வுக்கு தேவையான அளவு அரிசி நாட்டில் காணப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.