மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக இம்முறை 20 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கோரிக்கை கடிதம், பெருந்தோட்டக் கம்பனிகளிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்ணியின் ஹட்டன் பிதேச செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு, ஹட்டனில் நேற்று (15) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன, எனவே 15 ஆயிரம் ரூபா போதாது, இம்முறை 20 ஆயிரம் ரூபா கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததோடு, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் நிச்சயம் போட்டியிடுவார், அவரின் வெற்றி உறுதி. அதன்பின்னர் நாட்டுக்கும், மலையக மக்களுக்கும் சிறப்பான சேவைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.