ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவினால், நாடாளுமன்றில் வைத்து இன்று தான் தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சபையில் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த சர்ச்சை தொடர்பாக ஆராய்வதற்காக பிரதமரின் வேண்டுகோளுக்கு அமைவாக, சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் டயானா கமகே, “நாடாளுமன்ற நூலகத்திற்கு அருகிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பிரித்தியேக மின்தூக்கிக்கு அருகில், என் மீது அத்துமீறலொன்று மேற்கொள்ளப்பட்டது.
சுஜித் பெரேரா என்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரால் நான் தாக்கப்பட்டேன்.
சுமார் ஒன்றரை – இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுதொடர்பான விசாரணையொன்றை நான் சபாநாயகரிடம் கோருகிறேன்.
அத்தோடு, இந்த விடயம் தொடர்பாக நான் சட்டநடவடிக்கையொன்றையும் மேற்கொள்ளவுள்ளேன்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பெண்கள் தொடர்பாக பாரிய பிரச்சினையுள்ளது.
சுஜித் என்ற இந்த நபர், தனது மனைவி மீதும் தாக்குதல் நடத்துபவராகத்தான் இருக்க முடியும். அநாகரீகமான நபர்கள்தான் இவ்வாறு செயற்படுவார்கள்.
நாடாளுமன்றில் ஒரு உறுப்பினர் ஒருவர் பெண் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்த முடியுமாக இருந்தால், ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏனைய பெண்கள் தொடர்பாக எதனை பேசுவார்கள்?
இந்தவிடயம் தொடர்பாக நிச்சயமாக விசாரணையொன்று அவசியமாகும். இதற்கெதிராக நான் வீதிக்கு இறங்குவேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.