ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மேலும் அமைச்சுப் பதவிகளை வழங்கியுள்ளமைக்கு கட்சி என்ற ரீதியில் கடும் எதிர்ப்பை வெளியிடுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மெலும் தெரிவிக்கையில்,
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அவை அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள் என இறுதியில் நிரூபணமானது.
ஆனாலும் இவ்வாறான சூழலில் சில மாற்றங்களை கொண்டு வருவது சிறந்தது என்று ஜனாதிபதி நினைத்திருக்கலாம்.
எவ்வாறாயினும் இது குறித்து எமக்கு சிறிய மனஸ்தாபம் ஒன்று இருக்கின்றது. அது தொடர்பில் நாங்கள் ஜனாதிபதிக்கு அறிவித்தோம்.
ஜனாதிபதி இந்த நாட்டை நடத்தி செல்வதற்கான பலத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வழங்குகின்றது.
பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களே அதிக ஆதரவை வழங்குகின்றனர். அனாலும் ஐந்து அமைச்சர்களே அமைச்சு பதவிகளில் இருக்கின்றார்கள்.
அதிலும் ஒன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கி இராஜாங்க அமைச்சு பதவி ஒன்றையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வழங்கியுள்ளமை குறித்து நாங்கள் சந்தோசப்பட மாட்டோம்.
அது பிழையான விடயம். பிழையானதை பிழை என்று கூற நாங்கள் பயப்பட மாட்டோம்.
இது தொடர்பில் எமது கட்சி என்ற ரீதியில் நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.