அரசாங்கம் அமைச்சர்களை மாற்றிப் பிரச்சினைகளை மூடி மறைக்க முற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று அமைச்சரவை மாற்றமொன்று இடம்பெற்றது. இதனால் பிரச்சினைகள் தீருமா? இல்லை.
அமைச்சுக்களையும், அமைச்சர்களையும் மாற்றி பிரச்சினைகளை மூடி மறைக்க முற்படுகின்றனர்.
சுகாதார அமைச்சில் நிகழ்ந்த முறைகேடுகள்,ஊழல்கள் குறித்தும் தரம் குறைந்த மருந்துகள் குறித்தும் முழு நாடுமே கதைத்தது. இந்த அமைச்சர் மாற்றத்தால் இது சரிகட்டப்படுமா? இது என்ன நகைப்புக்குரிய விடயம்.
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி கூறுகிறார். அவர் என்ன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரா? இந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு ஏற்ப தேர்தல்கள் திணைக்களம் செயற்படும்.
ஜனாதிபதியின் தேவைக்கேற்ப ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டிய அவசியமொன்றும் இங்கில்லை. அடுத்த வருடம் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.
சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்து விவாதம் நடக்கும் போது சுகாதார அமைச்சருக்கு பக்கபலத்தை காட்டும் முகமாக ஜனாதிபதி சபா பீடத்தில் இருந்தார்.
அன்று பாதுகாத்து இன்று மாற்றியுள்ளார். ஆனால் அவர் செய்த ஊழல் மோசடிகளை மூடி மறைக்க இடமளியோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.