அடுத்த மூன்று வருடங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“30 வருடகால விடுதலைப் புலிகளின் யுத்தத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீட்டுத் தேவை 20 ஆயிரத்து 276 ஆக காணப்படுகின்றது
யுத்த காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த 3 ஆயிரத்து 828 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 683 பேர் தற்போது தாய்நாடு திரும்பியுள்ளனர்.
இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகளை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அந்த குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்படவுள்ளது.
அங்கு அவர்களுக்கு குடிநீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.