ஒவ்வொரு வருடமும் “யாழ் கானம்” நிகழ்ச்சி இடம்பெற வேண்டும் என்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பிரபல இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான சந்தோஸ் நாராயணனின் யாழ் கானம் எனும் மிகப் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி யாழ் முற்றவெளி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆதவன் தொலைக்காட்சி ஊடாக அனுசரணை வழங்கியிருந்த நிலையில் ஆதவன் வானொலி டிஜிடல் வானொலி அனுசரணையையும் தமிழ் எப் எம் வானொலி அனுசரணையையும் வழங்கியிருந்தன.
இவ்விடயம் தொடர்பாக யாழில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ் கானம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக முற்றவெளியில் நடந்திருக்கின்றது. யாழ்ப்பாண மக்கள் எமக்கு நிறையவே ஆதரவைத் தந்தார்கள்.
நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களுக்கும், போரின் போது இறந்தவர்களுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி இருந்தோம், நிகழ்வுக்கு மக்களுடைய ஆதரவு நிறையவே கிடைத்திருந்தது.
ஒவ்வொரு வருடமும் இந்த யாழ் கானம் இடம்பெற வேண்டும் என்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து வருகின்றேன்.
எமக்கு ஆதரவ வழங்கிய ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.