2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
இதேநேரம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக சம்பளத்தை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்குமாறும் ஜனாதிபதி தனியார் துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
நாடாளுமன்ற நடவடிக்கையின் பிரகாரம் வரவு செலவுத் திட்ட உரை எதிர்வரும் 13ஆம் திகதி நண்பகல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு கோரி இன்று நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.