”நாட்டில் மீண்டும் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகியுள்ள தகவலில் உண்மையில்லையென” விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” யூரியா உள்ளிட்ட ஏனைய உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சில விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறுவதில் உண்மையில்லை.
நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை. நாடளாவிய ரீதியில் சகல பிரதேசங்களுக்கும் உரம் வழங்கப்பட்டுள்ளதுடன், ஏதேனும் ஒரு பிரதேசத்திற்கு உரம் கிடைக்காத பட்சத்தில், உடனடியாக விவசாய அமைச்சுக்கு தெரியப்படுத்துங்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை ”இரண்டு பொதுத்துறை உர நிறுவனங்களாலும், தனியார் துறையினராலும் இப் பருவத்திற்குத் தேவையான உரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், உரம் கொள்வனவு செய்வதற்கு ஹெக்டேருக்கு 15,000 ரூபாய் வீதம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.