இலங்கையில் கடந்த 2 ஆம் திகதி ‘நாம் 200‘ நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றிருந்த குறித்த நிகழ்விற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கிய வீடியோ பதிவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் முதலமைச்சரின் காணொளியானது மிகவும் தாமதமாக வந்ததால் அதனை நிகழ்ச்சியில் இணைக்க முடியவில்லை என்று காரணம் கூறப்பட்டது.
இதேவேளை குறித்த காணொளியை ஒளிபரப்ப மத்திய அரசு ஆட்சேபனை தெரிவித்து தடை விதித்ததால் ஒளிபரப்பு செய்யப்படவில்லைவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய அந்த உரை தமிழகத்தில் உள்ள பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு செய்தி துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அது வெளியிடப்பட்டது.
இந்த விவகாரம் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இவ்விடயம் குறித்துக் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டைமான் ”இலங்கையில் 2-ஆம் திகதி மலையகத் தமிழர்களை கௌரவிக்கும் வகையில் ‘நாம்-200’ என்ற நிகழ்வினை நடத்தியிருந்தோம்.
இதற்கு பல்வேறு தரப்பினரையும் அழைத்திருந்தோம். அதை ஏற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்திருந்தார். மேலும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் ராம் மாதவ் வந்திருந்தனர். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பிதழ் கொடுத்திருந்தோம். முக்கியமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுத்திருந்தோம்.
இது முக்கியமான நிகழ்வு என்பதால் தமிழக அரசாங்கத்துக்கு பிரதிநிதித்துவம் செய்கிற மாதிரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கள் மக்களுக்கு ஒரு வாழ்த்து செய்தி தரும்படி கேட்டிருந்தோம். நாங்கள் கேட்டது கடைசி நிமிஷம் என்றாலும் கூட முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அவரது உரையை காணொளி மூலம் எங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
நிகழ்ச்சி 4 மணிக்கு தொடங்க இருந்த நேரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை எங்களுக்கு மதியம் 2½ மணிக்கு கிடைத்தது. இதை நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கு சில விதிமுறை உள்ளது. அந்த நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக எங்கள் நாட்டு ஜனாதிபதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் நீங்கள் கட்டாயம் இலங்கைக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நிர்வாக பிரச்சினை காரணமாகதான் இந்த சிக்கல் ஏற்பட்டது. மற்றபடி அவரது செய்தி மக்கள் எல்லோருக்கும் சென்று சேர்ந்துள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.