ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கையில் 10 வீதத்திற்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.
தேசத்தின் மனநிலை எனும் தொனிப்பொருளில் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வு அறிக்கையின் படி” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அங்கீகாரம் ஜூன் மாதத்தில் 21வீதமாக இருந்த நிலையில் அது நவம்பர் மாதத்தில் 9 வீதமாக குறைவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அதே போன்று கடந்த நான்கு மாதங்களில் அரசின் மீது மக்கள் கொண்டுள்ள திருப்தி என்ற காரணியும் நான்கு மாதங்களில் 12 வீதத்தில் இருந்து 6 வீதமாக குறைவடைந்துள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோல், பொருளாதார நம்பிக்கைக்கான சுட்டெண்ணும் 62இல் இருந்து 44 வீதமாக சரிந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் அனைத்து அம்சங்களிலும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில் பாரிய வீழ்ச்சியும் பின்னடைவும் ஏற்பட்டுள்ளது என்பதை குறித்த அறிக்கையின் தரவுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
இந்த ‘தேசத்தின் மனநிலை’ கருத்துக்கணிப்பானது ஆண்டிற்கு மும்முறை நடத்தப்படுகிறது. இதற்கமைவாக குறித்த ஆய்விற்காக நாடு முழுவதிலிமுள்ள மக்களிடம் கருத்துகள் கோரப்பட்டு அவை தொகுக்கப்படடு அறிக்கையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.