எதிர்வரும் மாதம் குளிர் காலம் அதிகமாகும் காரணத்தால் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது. எனவே நம்மை கதகதப்பாக வைத்துக் கொள்ளக்கூடிய, அதே நேரத்தில் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை நாம் அன்றாடம் சாப்பிட வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகளை பற்றி பேசுகையில் நெய் ஒரு பிரபலமான உணவாக அமைகிறது.
இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நம் உடலை கத கதப்பாக வைப்பதற்கு உதவுகிறது. எனவே இந்த குளிர் காலத்தில் நமது அன்றாட உணவில் நெய்யை சேர்த்துக் கொள்வதற்கு நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
நமது உடலுக்கு அத்தியாவசியமான ஆரோக்கியமான கொழுப்புகள் நெய்யில் நிறைந்துள்ளது என்ற உண்மை பலருக்கு தெரிவதில்லை. எனவே நெய்யை நமது அன்றாட உணவில் ஏன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான சில காரணங்களை இப்போது பார்க்கலாம்
ஊட்டச்சத்து : பல நூற்றாண்டுகளாக இந்திய சமையலில் நெய் ஒரு முக்கியமான உணவாக இருந்து வருகிறது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் இருப்பதோடு மட்டுமல்லாமல், இது நமது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி குளிர்கால மாதங்களில் நம் உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது. நெய்யில்A . D மற்றும் E போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் காணப்படுகிறது. இந்த வைட்டமின்கள் நமது நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு ஆதரவு தருவதற்கு அவசியமானவை.
நெய்யில் காணப்படும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நமது உடலில் உள்ள கழிவுகளை அகற்றவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அவசியமானது. இதில் புகையும் நிலை அதிகமாக இருப்பதன் காரணமாக நெய் சமைப்பதற்கு ஏற்றதாகவும், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை தக்க வைப்பதற்கும் உதவுகிறது. நமது அன்றாட உணவில் நெய்யை சேர்ப்பது உணவின் சுவையை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் நமது ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.