குடும்ப ஆதிக்கத்தினால்தான் கிரிக்கெட் விளையாட்டு இன்று மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஜ குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள், இன்றைய தினத்திற்குள் இராஜினாமா செய்ய வேண்டும்.
இது மட்டும்போதாது.
கிரிக்கெட் விளையாட்டின் எதிர்க்காலம் தொடர்பான முறையான வரைப்படமொன்று தேவைப்படுகிறது.
இலங்கை கிரிக்கெடிலிருந்து அரசியலை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.
ஊழல்வாதிகள், போதைப்பொருள் மாபியாக்கள், பாதாள குழுவினரின் தலையீடு இல்லாத கிரிக்கெட்டை உருவாக்க வேண்டும்.
இதற்கான நடவடிக்கையை 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எடுக்க வேண்டும்.
ஊழல் நிறைந்த நிர்வாக சபை, தூரநோக்கற்ற செயற்பாடு, ஒழுக்கமில்லாத நடவடிக்கைகள், நட்பு மற்றும் குடும்ப ஆதிக்கத்தினால்தான் கிரிக்கெட் விளையாட்டு இன்று மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தற்போது கிரிக்கெட் சபையானது, அரசியல் அழுத்தத்தினால்தான் கிரிக்கெட் விளையாட்டு மோசமடைந்துள்ளதாக உலகத்திற்கு கூறியுள்ளார்கள்.
இந்த கருத்தானது பொய்யென நாம் அனைவரும் ஒன்றிணைந்து இன்று ஐ.சி.சி.க்கும், சர்வதேச கிரிக்கெட் சபைக்கும் காண்பிக்க வேண்டும்.
கொள்ளை மற்றும் ஊழல் காரணத்தினால்தான் கிரிக்கெட் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் இதிலிருந்து தப்பிக்கவே அரசியல் அழுத்தம் இடம்பெற்றதாக இவர்கள் கூறுகிறார்கள் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.