சர்வதேச ஊடகங்களுக்கும் ஹமாஸ் படையினருக்கும் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.
ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து கண்காணிக்கும் இஸ்ரேலின் ஹானஸ்ட்ரிபோர்டிங் (HonestReporting) என்ற அமைப்பே குறித்த குற்றச் சாட்டை முன்வைத்துள்ளது.
இது குறித்து ஹானஸ்ட்ரிபோர்டிங் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ” காசா பகுதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களும், சர்வதேச ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சிலரும் , ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் காணப்படுகின்றனர்.
எனவே அவர்களுக்கு இத்தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அத்துடன் பிரபல சர்வதே ஊடகங்களான ரொய்டர்ஸ், தி அசோசியேட்டட் பிரஸ் மற்றும் தி நியூயோர்க் டைம்ஸ் ஆகிய சர்வதேச ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதிஇஸ்ரேலிய இராணுவ டாங்க் ஒன்றை ஹமாஸ் எரிக்கும் போதும், இஸ்ரேலில் இருந்து பணயக்கைதிகளாக பலரை ஹமாஸ் கொண்டு செல்லும் போதும் அருகிலேயே இருந்து குறித்த ஊடகவியலாளர்கள் அவர்களைப் படம் பிடித்துள்ளனர்.
அப்படியானால் இத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே ஊடகவியலாளர்களுக்கு தெரியவந்துள்ளதா? மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அவர்கள் துணை நிற்கின்றார்களா? பத்திரிகை தர்மத்தையும், தொழில் தர்மத்தையும் மீறிய செயல் இது என்பதால், இதனை இஸ்ரேல் தீவிரமாகக் கண்டிக்கின்றது” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளை இவ்விடயம் இது குறித்து சில சர்வதேச ஊடகங்களின் தலைமையகங்களுக்கு இஸ்ரேல் தகவல் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது. எவ்வாறு இருப்பினும் இக் குற்றச்சாட்டை ரொய்டர்ஸ் நிறுவனம் மாத்திரமே மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.