கோப் குழுவின் தலைவருக்கு கிரிக்கெட் சபையின் சாட்சிகளை கட்டுப்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை கிரிக்கெட் அணியை தடைசெய்யுமாறு ஐ.சி.சிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையினால் தான் இதற்கான தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இது தேச விரோதமான செயற்பாடாகும். கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமன்றி 220 இலட்சம் மக்களுக்கும் இழைக்கப்பட்ட பாரிய துரோகமாகும்.
இதுதொடர்பான உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலுக்கு சென்று இந்த தரவுகளை வழங்கியது யார் என்பதை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும்.
மேலும், கோப் குழுவின் முன்னிலையில் நேற்று கிரிக்கெட் சபை முன்னிலையானபோது, கோப் குழுவினர் தலைவர் ரன்ஜித் பண்டார, யாரோ ஒருவரை பார்த்து பதில் வழங்க வேண்டாம் என சைகை காண்பித்த காட்சிகளை நாம் ஊடகங்கள் வாயிலாக பார்த்தோம்.
கோப் குழுவின் தலைவர் பொறுத்தமாகவோ அல்லது பொறுத்தமற்ற வகையிலோ சாட்சியாளர்களின் பதிலை கட்டுப்படுத்த முயன்றுள்ளார்.
இது பாரதூரமான விடயமாகும். சபாநாயகர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
கோப் குழுவின் அங்கத்தவர்களாக உள்ள ஹேஷா வித்தானகே மற்றும் எஸ்.எம்.மரிக்கார் உள்ளிட்டவர்களின் சிறப்புரிமையும் மீறப்பட்டுள்ளது.
கோப் குழுவின் தலைவருக்கு கிரிக்கெட் சபையின் சாட்சிகளை கட்டுப்படுத்த முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.