நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை எனவும், பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி ரணில் விகரமசிங்க வரலாற்று சிறப்புமிக்க, புரட்சியான ஒரு வரவு செலவுத்திட்டத்தையே இம்முறை சமர்ப்பித்துள்ளார்.
இது வங்குரோத்து அடைந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவித்த ஒரு நாட்டின் வரவு – செலவுத் திட்டமாகும்.
இந்நாடு, பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தமைக்கு தர்க்க ரீதியிலான பிரதான இரண்டு காரணங்களே உள்ளன.
முதலாவது, அரச வரவு – செலவுத் திட்டத்தில் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை.
இரண்டாவது, சர்வதேச கொடுப்பனவுக் கையிருப்பின் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையாகும்.
நாட்டின் அன்றாட செயற்பாடுகளுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நிர்வாக செலவுகளுக்கு போதுமான அளவு நிதி இல்லாமை மற்றும் இறக்குமதிகளுக்கு ஏற்ப ஏற்றுமதி வருமானம் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தப் பற்றாக்குறைகள் ஏற்படுகின்றன.
வரவு செலவுத் திட்டத்திற்குப் பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடன் கிடைக்கவுள்ளது.
கடன் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர் வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் செயல்படுத்த போதுமான நிதி எமக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளோம்.
அதன் பிறகு, முடங்கிய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.