2030 இல் அனைவருக்கும் ஆங்கிலம் என்ற வேலைத்திட்டம், அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பதே அனைத்து பெற்றோரின் எதிர்பார்ப்பாகும். கல்வியை தமிழ், சிங்கள மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் ஜப்பான், சீனா, அரபு, கொரிய மொழிகளையும் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும்.
2030 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதேபோல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆங்கில அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான வேலைத்திட்டமும் தயாரிக்கப்படும்.
இந்நாட்டின் உயர்கல்வி தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இந்நாட்டின் இலவசக் கல்வி இருப்பதாக கூறினாலும் பெருமளவானோர் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் இந்நாட்டு பிள்ளைகள் உயர்கல்வி பயில்கிறார்கள். அந்த நாடுகளில் காணப்படும் கல்வி முறைமைகளை நமது நாட்டிலும் செயற்படுத்துவோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.