2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 13 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமான 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில், இன்று மாலை 6.00 மணிக்கு வரவு – செலவுத்திட்ட 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்த வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியில் உள்ள சிலர் ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஆளும் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த சிலரும் இந்த வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் சிலரும் இந்த வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நாளை முதல் அடுத்த மாதம் 13 ஆம் திகதி வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்ந்த நாட்களில் தொடர்ச்சியாக 19 நாட்களுக்கு வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது.
குழுநிலை விவாதத்தின் இறுதி நாளான டிசம்பர் 13 ஆம் திகதி, வரவு – செலவுத் திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதேவேளை, ஏயுவு வரி மற்றும் நிதிச் சட்டமூலங்கள் தொடர்பான 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
நேற்று கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.