யாழில் பிக்மீ மற்றும் ஊபர் சேவையைப் பயன்படுத்தும் முச்சக்கரவண்டிச் சாரதிகள் மீது இடம்பெற்று வரும் தாக்குதல் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.
யாழில் தரிப்பிட முச்சக்கர வண்டிச் சாரதிகள், அதிகளவில் கண்டனம் அறவிடுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்திவந்த நிலையில், அண்மையில் பொது மக்கள் நலன் கருதி அங்கு பிக்மீ, ஊபர் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் குறித்த சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அதிகளவான மக்கள் குறித்த சேவையைப் பயன்படுத்திவருவதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தரிப்பிட முச்சக்கர வண்டிச்சாரதிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் இதன் விளைவாக அண்மைக்காலமாக பிக்மீ மற்றும் ஊபர் சாரதிகள் தரிப்பிட சாரதிகளால் தாக்கப்பட்டு வரும் சம்பவங்களும் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
இந்நிலையில் கடந்த கடந்த வெள்ளிக்கிழமையும் பிக்மீ சாரதி ஒருவர் தரிப்பிட சாரதிகளால் தாக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போதும் பொலிஸாரும், தனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்ததாக குறித்த சாரதி கவலை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது குறித்து பிக்மீ நிறுவனத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து குறித்த நிறுவனம் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய முறைப்பாட்டினை அடுத்து, சாரதியை நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு முறைப்பாடு பெறப்பட்டது.
இதனடிப்படையில் யாழ் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி குறித்த முச்சக்கர வண்டிச்சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிக்மீ, ஊபர் முச்சக்கர வண்டி சாரதிகள் மீதான தாக்குதல்கள் மக்கள் மத்தியிலும், குறித்த சேவையைில் ஈடுபடும் முச்சக்கர வண்டிச் சாரதிகள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
எனவே நிலமை தீவிரமடைவதற்கு முன்னர் இப்பிரச்சனை தொடர்பாக யாழ் மாவட்ட பொலிஸார், வட மாகாண ஆளுநர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினர் ஆகியோர் இது குறித்து அவதானம் செலுத்தி, உரிய தீர்வினை வழங்குவது அவசியமாகும்.