மட்டக்களப்பு – வாகரை கண்டலடியில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கார்த்திகை மாதத்திலே இந்த வாரம் தமிழர்களுக்கு முக்கியமான வாரமென்பது தமிழர்களுக்கு தான் தெரியும்.
இந்த மண்ணுக்காக போராடி இந்த மண்ணிலே எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக வாழ வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக ஒரு விடுதலை பேராட்டத்திலே ஈடுபட்டு இலட்சக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் இராணுவத்தினரால் மாறி மாறி வந்த சிங்கள அரசாங்கத்தினரால் கொல்லப்பட்டனர்.
விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடும் தமிழ் மக்கள் தங்கள் இழந்த உறவுகளை நினைவுகூறும் வகையிலே வடக்கு கிழக்கில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடை பெற்றுவருகின்றன.
அஞ்சலி செலுத்துவதை தடைசெய்ய முடியாது. அரச இராணுவத்துடன் அல்லது புலானாய்வுத்துறையினரின் அனுசரணையுடனே குறித்த துயிலும் இல்லம் சேதமாக்கப்பட்டது” என அவர் மேலும் தெரிவித்தார்.