அவுஸ்ரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி, 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 2-0 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
திருவானந்தப்புரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ருத்துராஜ் கெய்க்வாட் 58 ஓட்டங்களையும் ஜெய்ஸ்வால் 53 ஓட்டங்களையும் இசான் கிசான் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நாதன் எலீஸ் 3 விக்கெட்டுகளையும் மார்கஸ் ஸ்டொயினிஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 236 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவு};ரேலியா அணியால், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி, 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்கஸ் ஸ்டொயினிஸ் 45 ஓட்டங்களையும் மத்தியு வேட் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பிரசீத் கிருஸ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் அக்ஸர் பட்டேல், ஹர்ஸ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 25 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 9 பவுண்ரிகள் அடங்களாக 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜெய்ஸ்வால் தெரிவுசெய்யப்பட்டார்.