மாவீரர் நாள் நினைவேந்தல் பொலிஸாரால் சீர்குலைக்கப்பட்டமை உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களில் அரசாங்கத்தின் இரட்டை தோற்றம் இவ்வாறான சம்பவங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நல்லிணக்கத்திற்கான சிறந்த வழியாக இருக்கக்கூடிய இவ்வாறான நினைவேந்தலைக் கூட அரசாங்கம் அனுமதிக்காவிட்டால், இந்த நாடு முன்னேறாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இந்த நினைவேந்தல் என்பது விடுதலைப் புலிகளைக் கொண்டாடுவதற்காக அல்ல என்றும், மூன்று தசாப்த கால இனக்கலவரத்தின் போது உயிரிழந்த அனைத்து பொதுமக்களையும் நினைவுகூருவதற்காகவே மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது என்றும் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வை நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகின்ற போதிலும் தமிழர்களின் உரிமைகளை அரசாங்கம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே இச்சம்பவங்கள் எடுத்துக்காட்டுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு அரசாங்கமோ அல்லது பெரும்பான்மை மக்களோ மேற்கொள்ளும் இவ்வாறான செயற்பாடுகள் குறிப்பிட்ட நாட்டில் நல்லிணக்கப் பொறிமுறைக்கு இடையூறாக அமையும் என இரா. சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.