இலவசக் கல்வியை நவீனத்துவப்படுத்தி, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களுக்கும் உயர்த்தரக் கல்விக்கான தெரிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
வரவு – செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது நாட்டின் கல்வியானது, புரட்சிகரமான மாற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.
50 களில் இருந்த சிங்களம் மட்டும்தான் என்றக் கொள்கையுடன், எம்மால் நாடு என்ற ரீதியில் தற்போது முன்னோக்கி நகர முடியாது.
எல்லைகளை வகுத்துக் கொண்டு பயணிக்கும் பயணத்தினால் நாட்டுக்கு சௌபாக்கியமான எதிர்க்காலம் கிடைக்காது.
சிங்கள மொழியுடன், ஏனைய மொழிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
விசேடமாக ஆங்கில மொழி மூலமான கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் உள்ளோம்.
க.பொ.த. சாதாரணத் தரப்பரீட்சைக்கு பின்னர் அல்லது அதற்கு முன்னர் பாடசாலைகளை விட்டு வெளியேறும் மாணவர்கள் தொழிற்கல்வியை எதிர்ப்பார்க்கிறார்கள்.
எனினும், தொழில்நுட்பக் கல்வி முறைமையானது நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ளது.
2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் உயர்த்தரப் பரீட்சைக்கு முகம் கொடுத்து, அதில் 15-20 வீதமானவர்கள் மட்டும்தான் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படுகிறார்கள்.
ஏனைய 7-8 வீதமானவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் சேர்கிறார்கள்.
எனினும், எஞ்சியுள்ள 70 வீதமான மாணவர்களுக்கு பட்டப்படிப்பை தொடர முடியாத நிலைமை காணப்படுகிறது.
இதனை நிவர்த்தி செய்ய வேண்டுமெனில், நாம் இலவசக் கல்வியை நவீனத்துவப்படுத்த வேண்டும்.
இதன் ஊடாக பல்கலைக்கழகத்திற்குள் செல்ல முடியாத 70 வீதமானோருக்கு உயர்க்கல்வியைத் தொடர்வதற்கான தெரிவை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.