நாட்டில் அண்மைக்காலமாக சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த போக்கு மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வந்துள்ளதால் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
யாழில். மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை, மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததை நாம் அறிவோம்.
இச்சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் மறையும் முன்னமே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சமூட்டும் வகையில் உள்ளன.
குறிப்பாக தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்துவரும் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன.
அண்மையில் கல்முனையிலுள்ள ஆலயமொன்றில் திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 வயதான சிறுவனொருவன் பெண் பராமரிப்பாளர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவத்தினையடுத்து குறித்த சிறுவனைத் தாக்கிய பெண் பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது இவ்வாறு இருக்க யாழில் அப்பியாச கொப்பியில் ஒழுங்காக எழுதவில்லை எனக் கூறி ஆசிரியை ஒருவர் கையில் அடித்ததில் மாணவனின் நகம் சிதைவடைந்து சத்திர சிகிச்சை மூலம் நகம் அகற்றப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அம்மாணவனின் பெற்றோர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது யாழ். சாவகச்சேரியில், ஞாயிறு ஆராதனைக்குச் செல்லவில்லை எனக் கூறி சிறுமி ஒருவர் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமி மீது தாக்குதல் நடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது அவ்வப்போது பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும், ஆசிரியர்களால் மாணவர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வரும் சம்பவங்களும், அதிகளவில் பதிவாகி வருகின்றன.
இது இவ்வாறு இருக்க அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக யாழில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் நுரையீரல் மற்றும் இருதய “வால்வு” ஆகியவற்றில் கிருமித் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் பெருமளவானோர் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக பாடசாலைகளுக்கு முன்பாக மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருள் வியாபாரம் இடம்பெற்று வரும் சம்பவங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளன.
இளைஞர்களின் கையிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது என்றால், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல சிறுவர்கள், மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு மற்றும் நன்நடத்தையில் குடும்பம், சமூகம் மாத்திரமல்லாது மக்களுக்கான சேவையில் ஈடுபடும் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.
மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு செல்லும் அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் தமது கடமையை முறையாக செய்வதன் மூலம் இத்தகைய பிரச்சனைகளைத் தடுக்க முடியும்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுப்பது மாத்திரமல்லாது இனிமேல் இது போன்ற பிரச்சனை இடம்பெறாத வண்ணம் நடவடிக்கை முன்னெடுக்க வேண்டியதும் அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகளின் கடமையாகும்.
-இளங்கோ பாரதி