கிளிநொச்சி – பூநகரி குளத்தின் மேற்பரப்பில் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவுவதற்காக அவுஸ்திரேலியாவுடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பூநகரி குளத்திலிருந்து புதிய கிளிநொச்சி உப மின் நிலையம் வரை தேவையான மின்கடத்திக் கட்டமைப்பை நிர்மாணித்தல் உள்ளிட்ட 100 வீத மின்கல வலுசக்தி காப்புக் கட்டமைப்புடனான 700 மெகாவொட் சூரிய மின்சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக யுனைற்றட் சோலர் எனர்ஜி கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதேநேரம் கருத்திட்டமுன்மொழிவு மதிப்பீடு மற்றும் வலுசக்தியை கொள்வனவு செய்யும் கட்டணத்தை தீர்மானிப்பதற்காக அமைச்சரவைக்கு பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டு குழுவை நியமிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
அதற்கமைய, பேச்சுவார்த்தை உடன்பாட்டு குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் யுனைற்றட் சோலர் எனர்ஜி கம்பனியுடன் உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துதல் மற்றும் அதற்குரிய மின்சாரத்தை கொள்வனவு செய்யும் உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.