கடந்த 2019 ஆம் ஆண்டு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 107 கிலோகிராம் போதைப்பொருட்களை எரித்து அழிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போதைப்பொருட்கள் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இருந்து புத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பலாவியில் அமைந்துள்ள இன்சி சீமெந்து தொழிற்சாலையிலுள்ள கிடங்கொன்றில் எரிக்கப்பட்டுள்ளன.
குறித்த போதைப்பொருள் தொகையை கொண்டு செல்வதற்காக விசேட பொலிஸ் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த ஹெரொயின் தொகை கடந்த 2019 ஆம் ஆண்டு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டதுடன், 9 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த 9 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டு அவர்கள் குற்றவாளிகள் என உறுதியானதையடுத்து அவர்களுக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த போதைப்பொருள் தொகையை அழிக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.