மின்சாரத்துறையில் இடம்பெற்ற மற்றுமொரு ஊழல் மோசடி குறித்த தகவல்களை ஆதாரங்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளிப்படுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள விசேட காணொளி அறிவிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கிளிநொச்சி பூநகரியில், சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தாலும் முறையான கொள்முதல் நடைமுறைகளுக்குப் புறம்பாக அந்தத் திட்டத்திற்காக அவுஸ்திரேலிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இது மற்றுமொரு ஊழல் நிறைந்த கொடுக்கல் வாங்கலுக்கான பிரவேசம் ஆகும்.
இதில் போட்டித் தன்மை தவிர்த்து தமது நெருங்கிய நண்பர்களுக்கு இத்திட்டத்தை வழங்குவதானது நாட்டுக்கு பாதிப்புகளை விளைவிக்கும் செயல்.
அமைச்சரவை செயலாளர் தலைமையில் இதில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் நாட்டிற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நிறுவனத்தால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் இயலுமை உள்ளதா இல்லையா என்பதை மதிப்பீடு செய்யவில்லை.
இது தேசிய சொத்துக் கொள்ளையாகும். 2024 தேர்தலில் படுதோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால் போட்டி முறையை மாற்றி, இதுபோன்ற திட்டங்களை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தி வருகின்றது.
எனவே புலனாய்வு ஊடகவியலாளர்கள் இவ்விடயம் தொடர்பான உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.