மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக, மாவட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதி வெள்ளத்தினால் மூழ்கியுள்ளமையால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவைகளும் பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு, பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதி உள்ளிட்ட பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளமையால் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத நிலைமைக்கும் மாவட்ட மக்கள் உள்ளாகியுள்ளனர்.
தற்போது பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் குறுக்கே கல்லெல்ல பாலத்திற்கு அருகில் சுமார் ஒரு அடி வரை நீர்மட்டம் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அதனை கருத்திற்கொண்டு மறு அறிவித்தல் வரை கல்லெல்ல பகுதியில் இருந்து வீதி மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவைகளும் பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
கனமழையுடன் ரயில் பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த வழியான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ரயில்வே திணைக்களம், மட்டக்களப்புக்கு இயக்கப்படவிருந்த இரவு அஞ்சல் ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.