”மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அநாகரிமாக நடந்துகொள்வதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக்காரிய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” எங்களுடைய கட்சி ஆரம்பித்து இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன. அன்று எமது கட்சி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
முதல் முதலாக சுயேட்சையாக போட்டியிட்டு பிரதேச சபை தேர்தலில் 7 வட்டாரங்களை எமது கட்சி கைப்பற்றி இருந்தது. அதனை நாங்கள் பாரிய வெற்றியாக பார்க்கின்றோம். இரண்டாவதாக வந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு இன்று 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை இந்த மக்கள் நமக்கு அள்ளி வழங்கியிருந்தார்கள்.
உண்மையிலேயே அவர்களின் நன்றியை ஒருபோதுமே மறக்கப் போவதில்லை. இருப்பினும் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் என்னால் அன்று நாடாளுமன்றம் செல்ல முடியாமல் போய்விட்டது. அன்று இருந்தால் அம்பாறை மாவட்டத்தில் பாரிய மாற்றங்களை செய்து இருக்கலாம். அம்பாறை மாவட்ட மக்கள் எமது கட்சிக்கு பாரிய அத்திவாரம் இட்ட மக்கள் என்பதனை நாங்கள் மறந்து விடக்கூடாது.
இன்று 72 வருட வரலாற்றிலே முதன் முதலாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடித்தவன் என்று பெருமையை நாங்கள் அம்பாறை மாவட்டத்திலேயே நிருபித்து காட்டினோம். அந்த அளவிற்கு அந்த மக்கள் நமக்கு ஒத்துழைத்தார்கள்.
கடந்த வரலாற்றிலே எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தனிப்பட்ட குரோதங்களை விவாதிப்பதற்கான களமாக தான் நாடாளுமன்றத்தை பயன்படுத்துகின்றார்கள்.
நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி எம்முடைய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை அவர்கள் முன்னெடுக்கவில்லை. எல்லா மாவட்டங்களையும் விட எங்களுடைய மாவட்ட உறுப்பினர்கள் மிகவும் அநாகரிமான முறையில் நாடாளுமன்றத்தில் செயற்படுகின்றனர்.
இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள். ஆகவே எதிர்காலத்தில் சிறந்த தகுதியான நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். வடக்கு கிழக்கு பிரதேசம் மாத்திரம் அல்ல இலங்கையில் இருக்கின்ற அனைத்து தமிழ் மக்களுக்குமான எங்களுடைய குரல் ஒலிக்கும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்