ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்; யார் என்பதில் ஜனாதிபதியும் மொட்டுக்கட்சியும் தற்போது குழப்பத்தில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார் இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்ற செய்தியை மக்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க பரப்புகின்றார்.
இதன் மூலம் மக்களின் கருத்துக்களை ஆராய்ந்து எடை போட்டு வருகிறார்.
சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் ஐ.தே.க வேட்பாளர் யார் என்பதில் ஜனாதிபதியும் மொட்டும் தற்போது குழப்பத்தில் உள்ளனர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு கூட முதுகெலும்பில்லாத இந்த அரசாங்கம் பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்று தம்பட்டம் அடித்து வருகிறது.
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியும் மக்களும் தயாராகவே உள்ளனர்.
நாட்டில் 18 வீதமாக வற் வரியை அதிகரித்து ஜனாதிபதி வெளிநாட்டுப் பயணங்கள் செல்வது போன்று
250 மில்லியன் ரூபாவை செலவழித்து செங்கடலைப் பாதுகாக்க கடற்படையை அனுப்புகின்றார்.
ஆனால் இங்குள்ள பாடசாலைகளால் குடிநீர் கட்டணத்தை கூட செலுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது” என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.