பத்தொன்பது வயதுக்குட்பட்ட ஒருநாள் கிரிக்கெட் உலகக்கிண்ணத் தொடரின் 12ஆவது லீக் போட்டியில், இலங்கை அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கிம்பர்லே- டயமண்ட் ஓவல் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை அணியும் நமிபியா அணியும் பலப்பரீட்சை நடத்தின.
குழு ‘சி’ பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நமிபியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 37.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்புன் வாதுகே ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் ருசந்த கமகே 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நமிபியா அணியின் பந்துவீச்சில், ஸாக்கியோ வான் வுரென் 4 விக்கெட்டுகளையும் ஜோஹன்னஸ் டி வில்லியர்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 134 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நமிபியா அணி, 27 ஓவர்கள் நிறைவில் 56 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இலங்கை அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பி.டி.பிளிக்நாட் ஆட்டமிழக்காது 18 ஓட்டங்களையும் ஹன்ரோ பேடன்ஹார்ஸ்ட் 11 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், விஷ்வா லஹிரு மற்றும் ருவிஷான் பெரேரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் தினுர கலுபாஹன 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, இலங்கை அணி சார்பில், 79 பந்துகளில் ஆறு பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சுப்புன் வாதுகே தெரிவுசெய்யப்படடார்.