பத்தொன்பது வயதுக்குட்பட்ட ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர் சிக்ஸ் சுற்றில், இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வியடைந்துள்ளது.
கிம்பர்லே- டயமண்ட் ஓவல் மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தினுர கலுபாஹன 53 ஓட்டங்களையும் மல்ஷா தருபதி 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ரனிகோ ஸ்மித் 4 விக்கெட்டுகளையும் நதன் எட்வட்ஸ் 2 விக்கெட்டுகளையும் நதன் சீலி மற்றும் தரிக்யு எட்வட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 232 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 49.3 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்டீவ் வெட்டர்பர்ன் 61 ஓட்டங்களையும் ஜோர்தான் ஜோன்ஸன் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், தினுர கலுபாஹன, விஷ்வ லஹிரு மற்றும் சினித் ஜயவர்தன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் விஹஸ் தெவ்மிக 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 71 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக 61 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஸ்டீவ் வெட்டர்பர்ன் தெரிவுசெய்யப்பட்டார்.