கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஆனையிறவு மற்றும் மன்னார் உப்பளங்கள் மூலம் இலாபமாக பெற்ற சுமார் 100 மில்லியன் ரூபா நிதியினை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொஸ்பேட் நிறுவனம் சுமார் 24 மில்லியன் மதிப்பிலான கனிம வளங்களைக் கொண்டுள்ளது.
ஆனால் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடுத்துள்ள வழக்குகளின் காரணமாக அதிலிருந்து வருமானம் ஈட்ட முடியாத நிலை உள்ளது.
இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தாலும், குறிப்பிட்ட அளவு பொஸ்பேட்டை விற்பனை செய்ய முடிந்தது.
அதன் மூலம் அனைத்துக் கடன்களையும் செலுத்தி சம்பளமும் கொடுத்து திறைசேரிக்கும் 350 மில்லியன் ரூபாவை வழங்க முடிந்துள்ளது.
அத்துடன் ஆனையிறவு மற்றும் மன்னார் உப்பளங்கள் மூலம் இலாபம் ஈட்டி 100 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்கினோம்.
நாட்டில் உள்ள வளங்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதை செயல்படுத்துவதில் பல்வேறு தடைகள் எழுகின்றன.
உதாரணமாக, பொஸ்பேட் ஏற்றுமதிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரச்சினைகளையும் தடைகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
பிரச்சினைகள் எழுகிறது என்பதற்காக நாட்டின் வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதை நிறுத்தக் கூடாது.
நாடு பொருளாதார வீழ்ச்சி அடைந்திருக்கும் வேளையில் அவைகளைப் பயன்படுத்திக் கொள்ளாததை நான் பாரிய குற்றமாகப் பார்க்கிறேன்.
சீமெந்துக் கூட்டுத்தாபனம் தற்போது பெயரளவிலேயே செயற்படுகிறது.
சுமார் 5000 ஏக்கர் காணியும் பல மில்லியன் டொலர்கள் மதிப்பிலான கனிம வளங்களும் அங்கு உள்ளன. அதை வருமானம் ஈட்டும் மூலங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.
இதன்படி வருடத்திற்கு சுமார் 300 மில்லியன் டொலர் வருமானம் ஈட்ட எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் முதலீடு செய்யத் தயாராக உள்ள நிறுவனமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது” என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மேலும் தெரிவித்தார்.