பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் முடிவெடுக்க முடியும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்விடயத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேனவும் பசில் ராஜபக்ச ஓரிரு நாட்களில் நாடு திரும்பவுள்ளதால் அவர் வந்த பின்னர் முடிவெடுக்கப்படும் என அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் இறுதித் தருணத்திலேயே ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்டதாகவும், வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான பலம் எமது கட்சியிடம் இன்னும் உள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பலர் போட்டியிடவுள்ள நிலையில், வெற்றி வேட்பாளர் ஒருவரை நிச்சயம் களமிறக்க வேண்டிய அவசியமுள்ளதால், இவ்விடயத்தில் உரிய வகையில் வியூகம் அமைத்து, கட்சியாக கூடி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், பசில் ராஜபக்ச நாட்டில் இல்லாமையால் வேட்பாளர் மற்றும் கூட்டணியாகப் போட்டியிடுவது ஆகியன தொடர்பில், இறுதி முடிவுகள் எதனையும் எடுக்க முடியாமல் அக்கட்சி இக்கட்டான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.