இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இணைய பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது குறித்த சட்டத்தின் ஏற்பாடுகள் அமுலில் உள்ளது.
இந்த சட்டம் நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கமைய மேற்கொள்ளப்பட வேண்டியமையால், துறைசார் நிபுணர்கள் சமர்ப்பித்துள்ள திருத்த முன்மொழிவுகளை குறித்த சட்டமூலத்தில் அறிமுகப்படுத்துவதற்கு இயலாமல் போயுள்ளது.
இதனால், இந்த திருத்தங்களை சமர்ப்பித்துள்ள துறைசார் நிபுணர்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி அடையாளங் காணப்பட்டுள்ள திருத்தங்களின் அடிப்படையில் இந்த சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்கப்படவுள்ளது.
இதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.