யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்திருந்தார்.
இதேவேளை மத்தள விமான நிலையம் தொடர்பில் முதலீட்டு விருப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் புதிய முதலீட்டாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த முதலீட்டாளருடனான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதன்கான் ஒப்பந்தங்கள் அடுத்த வாரம் எட்டப்படலாம் என்றும் அதன் மூலம் மத்தள விமான நிலையத்தையும் இலாபமீட்டும் வகையில் மாற்ற முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் ரஷ்ய மற்றும் இந்திய தனியார் கூட்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் ஏற்படும் தாமதங்களைத் தடுப்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.