நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை நடத்தாது பிற்போடப்படுமானால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்கு செல்ல நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்ட மக்கள்மஹிந்த ராஜபக்ஷவுக்கு 5 இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளை வழங்கினார்கள்.
இதனால் என்ன பயன் கிடைக்கப் பெற்றது என்பதை குருநாகல் மாவட்ட மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் வழங்கிய மக்களாணை இன்று முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனி ஆசனத்துடன் நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
நெருக்கடியான நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்றார் என்று பொதுஜன பெரமுனவினர் தற்போது புகழ்பாடுகிறார்கள்.
2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரசாரங்களில் ‘மத்திய வங்கியின் பிரதான சூத்திரதாரியான ரணிலை சிறைக்கு அனுப்புவோம்’ என்பது பொதுஜன பெரமுனவின் பிரதான அரசியல் வாக்குறுதியாக அமைந்தது.
அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தேர்தலை பிற்போட்டு தனது பதவி காலத்தை நீடித்துக் கொள்ள ஜனாதிபதி முயற்சித்தால் அவர் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் வீடு செல்ல நேரிடும்” என அனுரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.